தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் துவக்கப்பட்டுள்ள 18 மாதிரி பள்ளிகளிலும், தலா 17 ஆசிரியர் பணியிடங்களும், ஏழு ஆசிரியரல்லாத பணியிடங்களும் உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த கல்வியாண்டில் தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா தரத்தில், மாதிரி பள்ளிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக நடப்பு கல்வியாண்டில் 18 மாதிரி பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன. ஆறாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை ஆங்கில வழிக்கல்வியை இலவசமாக வழங்கும் இம்மாதிரி பள்ளிகளில், தலா 17 ஆசிரியர்களையும், ஏழு ஆசிரியரல்லாத பணியாளர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஒரு பள்ளி முதல்வர், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய ஏழு பாடங்களுக்கும் தலா ஏழு முதுகலை ஆசிரியர்கள், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆகிய ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு கம்ப்யூட்டர் ஆசிரியர், உடற்கல்வி, இசை, ஓவியம் ஆகியவற்றுக்கு தனித்தனியே ஆசிரியர் என கால முறை ஊதியத்தில் 17 ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தொகுப்பூதியத்தில் ஒரு இளநிலை உதவியாளர், நூலர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், இரவு காவலாளி, தோட்டக்காரர் ஆகிய ஏழு ஆசிரியரல்லாத பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டும். பொதுவாக திட்டப்பணிகளுக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு திட்ட நிதியிலிருந்து நேரடியாக சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் மாதிரி பள்ளி ஆசிரியர்களுக்கு, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதை போல், கருவூலம் வழியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு வகுப்புக்கு 40 மாணவர்கள் மட்டுமே அதிகபட்சமாக சேர்க்கப்படும் மாதிரி பள்ளிகளில், 400க்கும் குறைவான மாணவர்களுக்கு 17 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது கல்வித்துறை வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களை உடனடியாக நியமிக்கும் பட்சத்தில், நடப்பாண்டில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், மாணவர் சேர்க்கையில் காணப்பட்ட தொய்வு, வரும் கல்வியாண்டில் நீங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்பள்ளிக்கான ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் அரசு ஆசிரியர்களுக்கிடையேயான கவுன்சலிங் ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.