Thursday, December 30, 2010

20 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் பணியிடம் நிரப்ப அரசு உத்தரவு

காலியாக இருந்த 20 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், தர்மபுரி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 33 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணியிடங்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக இருந்தன.


நேரடி நியமனம்: இதில் தர்மபுரி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களின் பணியிடங்கள் 4 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் நேரடியாக நிரப்பப்பட்டன.


இதற்கிடையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இளநிலை வேலைவாய்ப்பு அலுவலராக பணிபுரிந்து, பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று வேலைவாய்ப்புத் துறை ஊழியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
 பதவி உயர்வு மூலம்... இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பெயர் பட்டியல் விவரத்தை அனுப்பும்படி வேலை வாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இளநிலை வேலைவாய்ப்பு அலுவலராக பணியாற்றியவர்கள் 20 பேருக்கு பதவி உயர்வு வழங்கி 2 நாள்களுக்கு முன்பு  தமிழக அரசு உத்தரவிட்டது.


இதன் மூலம் 2 ஆண்டுகளுக்கு மேலாக காலிப்பணியிடமாக இருந்த காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.


இவர்கள் தங்களுக்குரிய பணியிடங்களில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 31)  பொறுப்பு ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களது அடிப்படை ஊதியம் ரூ. 9,300-ல் இருந்து ரூ. 15,300-ஆக உயரும் என்றும் கூறப்படுகிறது.


உதவி இயக்குநர் பணியிடம்: காஞ்சிபுரம், தஞ்சாவூர், கோவை, சென்னை மற்றும் இயக்குநரகத்தில் உள்ள 8 வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் காலிப்பணியிடங்கள் வரும் ஜனவரியில் நிரப்பப்பட உள்ளன.
இதில் ஏற்கெனவே மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராக உள்ள 5 பேர் உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற உள்ளனர்.  


மீண்டும் 15 காலிப்பணியிடம்: இப்போது பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்ட 20 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் 7 பேர் வரும் மே இறுதிக்குள் பணி ஓய்வு பெறுகின்றனர். மேலும் ஏற்கனவே திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களும் மே மாதத்துக்குள் ஓய்வு பெற உள்ளனர்.


இது தவிர 5 பேர் உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற உள்ளனர். இதனால் வரும் மே மாத இறுதிக்குள் மீண்டும் 15 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களின் பணியிடம் காலியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


20 பணியிடம் நிரப்பப்பட்டுவிட்டன என்று அரசு நிம்மதி பெருமூச்சு விடும் முன்பு, வரும் மே இறுதியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பெயர் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
அப்போதுதான் இந்தக் கல்வி ஆண்டில் (2010-2011) 10, 12-ம் வகுப்பு முடித்துவிட்டு தங்களது தேர்ச்சி சான்றிதழை பதிய வரும் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க வசதியாக இருக்கும்.

No comments:

Post a Comment