புதுடில்லி: எம்.பி.பி.எஸ்., மருத்துவ பட்டப்படிப்பில் வரும் கல்வியாண்டு முதல், கூடுதலாக 10,000 மாணவர்களை சேர்ப்பதற்கு, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு தக்கவாறு, போதுமான டாக்டர்கள் இல்லை என்று புள்ளிவிவர அறிக்கைகள் எச்சரித்து வருகின்றன. எனவே, டாக்டர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில், எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப்பில் வரும் கல்வியாண்டு முதல் கூடுதலாக 10,000 மாணவர்களை சேர்ப்பதற்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) தலைவர் ஷிவகுமார் சரின் கூறியதாவது: நோயாளிகள், டாக்டர்கள் விகிதாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள அதிக இடைவெளியை குறைக்க முடிவு செய்யப்பட்டது. வரும் கல்வியாண்டு முதல் எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப்பில் கூடுதலாக 10,000 மாணவர்களை சேர்க்க, மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அடுத்த நான்காண்டுகளில், கூடுதலாக 10,000 டாக்டர்கள் உருவாக்கப்படுவர்.
தவிர, கூடுதல் மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் புதிதாக 66 மருத்துவ கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதி வழங்கப்படும். புதிய மருத்துவ கல்லூரிகள் துவங்குவதற்கு ஏதுவாக, சில விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளன. மருத்துவ கல்லூரிகள் துவங்குவதற்கு, குறைந்தபட்சம் 25 ஏக்கர் நிலம் வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில், மாநகரங்கள் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில், ஒரே இடத்தில், 25 ஏக்கர் நிலத்தை வாங்குவது சாத்தியமில்லை.
எனவே, இனிமேல் 10 ஏக்கர் நிலம் இருந்தாலே, மருத்துவ கல்லூரி துவங்குவதற்கு அனுமதி வழங்கப்படும். தவிர, கிராமங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் மருத்துவ சேவையை விரிவுப்படுத்தும் வகையில், எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப்பில், மேலும் கூடுதல் மாணவர்களை சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக, ராணுவம், ரயில்வே உள்ளிட்ட துறைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஏனெனில், அவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில், அதிக அளவில் இடம் உள்ளது. இதுகுறித்து விரைவில் சுமுக முடிவுகள் எட்டப்பட்டவுடன் அறிவிப்புகள் வெளியிடப்படும். இவ்வாறு ஷிவகுமார் சரின் கூறினார்.
No comments:
Post a Comment