தமிழகத்தில் 354 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இடைநிலைக் கல்விக்காக ரூ.800 கோடியை ஒதுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் மத்திய இடைநிலைக் கல்வி திட்டம், கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக 18 மாதிரிப் பள்ளிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அவற்றில் 6, 7, 8 வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் செயல் திட்டம் தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த செயல் திட்டம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த வாரம் டெல்லியில் இறுதி முடிவு எடுக்கும் கூட்டம் நடந்தது.
அதில், தமிழகத்தில் மத்திய இடைநிலைக் கல்விக்காக ரூ.800 கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் 354 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் அனுமதி வழங்கியுள்ளது. தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு தலா 6 பட்டதாரி ஆசிரியர்களை மாணவர்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப உடனடியாக நியமிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்பேரில் தரம் உயர்த்தப்படும் 354 பள்ளிகளுக்கும் 2100 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இதுதவிர 3000 பட்டதாரி ஆசிரியர்களை கூடுதலாக நியமிக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து கட்டிடம், கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதிகளை செய்து தரவும் அரசு முடிவு செய்துள்ளது. கட்டிடம் கட்டும் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டது. பட்டதாரி ஆசிரியர் நியமனம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment