Tuesday, January 25, 2011

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தள்ளி வைக்க தேர்வுத்துறை திட்டம்? - 25-01-2011

சட்டசபை தேர்தல் காரணமாக, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், ஒரு வாரம் வரை தள்ளிப்போவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 2ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் துவங்குகின்றன. இதை, மாணவர்கள் மூன்று லட்சத்து 38 ஆயிரத்து 428 பேரும், மாணவியர் மூன்று லட்சத்து 99 ஆயிரத்து 200 பேரும் எழுத உள்ளனர். பிப்ரவரி 3ம் தேதி முதல், 22ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடக்கின்றன. வழக்கமாக, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே இரண்டாவது வாரத்தில் இருந்து, மூன்றாவது வாரத்திற்குள் வெளியிடப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு, மே 14ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாயின. இந்த ஆண்டும், அதே தேதியிலோ அல்லது ஓரிரு நாள் முன்னதாகவே தேர்வு முடிவை வெளியிடலாம் என, தேர்வுத் துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், சட்டசபை தேர்தல் முடிவுகள் மற்றும் புதிய அரசு பதவியேற்பு விழா ஆகியவை, இதே தேதிகளுக்குள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய தி.மு.க., அரசு, 2006ம் ஆண்டு மே 13ம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. எனவே, வரும் மே 13க்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டும். ஓட்டுப்பதிவு மற்றும் தேர்தல் முடிவு வெளியீடு ஆகியவை, மே 12ம் தேதிக்குள் முடிந்துவிடும் என்றும், 13ம் தேதி வெள்ளிக் கிழமை புதிய அரசு பதவியேற்கலாம் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இடைப்பட்ட தேதிகளில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவது அவ்வளவு சரியாக இருக்காது என, தமிழக அரசும், தேர்வுத் துறையும் கருதுவதாக தெரிகிறது. பொதுத்தேர்வை நடத்தி, முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக, சென்னையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், கல்வித் துறை, தேர்வுத்துறை உயர் அதிகாரி கள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் என, பலர் கலந்து கொண்டனர். இதில், பிளஸ் 2 தேர்வு முடிவு களை ஒரு வாரம் தள்ளி வெளி யிடுவது குறித்து ஆலோசிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு மே 15ம் தேதிக்குப் பிறகு தான் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 முதல் 20ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில், தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை முடிவெடுத்திருப்பதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. விடைத்தாளுக்கு

கூடுதல் பாதுகாப்பு: தேர்வு குறித்து, நிருபர்களிடம் அமைச்சர் கூறும்போது, ‘எவ்வித பிரச்னையும் இன்றி, சுமுகமாக தேர்வுகளை நடத்துவது குறித்து, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். குறிப்பாக, தேர்வு முடிந்ததும் அந்த மையத்திலிருந்து, வேறொரு மையத்திற்கு எடுத்துச் செல்லும்போது (திருத்துவதற்காக), கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்.

‘வழக்கமாக, விடைத்தாள்களுடன் போலீசார் செல்கின்றனர். எனினும், இந்த ஆண்டு பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவர். இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க் களுடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

No comments:

Post a Comment